மதுரை, ஜூலை 28: இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும் என்று திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஐ.எஸ்.யு. இயக்குநர் டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவியல் உற்சவப் பெருவிழா எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மதுரையில் புதன்கிழமை தொடங்கியது. ஆக. 1-ம் தேதி வரை 5 நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக தொலைக்கல்வி, தொலை மருத்துவம் ஆகியன நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பள்ளி வகுப்பறைகள், பெரிய கல்வி நிறுவனங்களுடன் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியாவை சர்வ வல்லமை பொருந்திய நாடாக உருவாக்குவதற்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிக அவசியமாகும் என்று மறைந்த பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அன்றைக்கே உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் என்று டாக்டர் அப்துல்கலாமும் வலியுறுத்தியுள்ளார். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய், நாட்டின் மேன்மைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுடன் பயன்பாடும் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியா இந்த இரு தளங்களிலும் தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
அதேபோன்று நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முழுப் பயனையும் நாம் இன்றைக்குப் பெறவில்லை என்றாலும்கூட, இன்னும் 10 ஆண்டுகளில் அனைத்துத் தளங்களிலும் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதற்கான ஏராளமான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன. இதற்கான திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியா இதுவரை 50 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவை. விண்வெளி தொழில்நுட்பத்துக்கான செலவு குறைவாகவும், ஆனால் அதிக பலனையும் அளித்துள்ளது. சந்திராயன் இதற்கு ஒரு உதாரணம்.
மேலும், இந்தியாவின் வரைபடத்தைக்கூட துல்லியமாக எடுக்கும் அளவுக்கு நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மிக உன்னத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் அறிவியல் மீது ஆர்வம் காட்டி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார் சிதம்பரம். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து வேலம்மாள் கல்வி நிறுவன அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் பேசியது:
அறிவியல் தொழில்நுட்பம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதாலும், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அவை தூண்ட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.40 லட்சம் செலவிட்டுள்ளோம். இதை மாணவர்களின் அறிவியல் வளர்ச்சிக்கான முதலீடு என்ற நோக்கில்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார் அவர்.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் வி.ராதாகிருஷ்ணன், வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் என்.சுரேஷ்குமார், முனைவர் எஸ்.வாசுகி உள்பட பலர் பேசினர். விழாவுக்கு பின்னர், அறிவியல் கண்காட்சியை விஞ்ஞானி டி.ஆர்.சிதம்பரம் சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் இதுகுறித்து அவர் கூறியது:
இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலரும் தங்களது அறிவியல் படைப்புகளை மிக நேர்த்தியாக, ஆர்வத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கண்காட்சி மூலம் குழந்தைகளுக்கு புதிய சிந்தனை பிறக்கும். கண்காட்சியில் காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி எரிசக்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி தொடர்பான படைப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இது இன்றைக்கு நாட்டுக்கான அவசியத் தேவையாகும். அதேபோன்று ஆட்டோமேஷன் தேவை குறித்த விழிப்புணர்வு படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர். கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
Source: Dinamani
- Comments













குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...