
காவிரி நதி நீர் பகிர்வு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு சரியாக பின்பற்றாமல், தமிழகத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் விடுவித்து வருகிறது. எனவே இது குறித்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், கர்நாடக அரசு, காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு ஒவ்வொரு பருவ நிலைக்கும் எவ்வளவி டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வரையறை செய்து அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனை கர்நாடக அரசு எந்த காலத்திலும் பின்பற்றுவதில்லை.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில்லை. கோடைக் காலம் துவங்கும் முன்பே 4 அணைகளையும் கர்நாடகம் காலி செய்துவிடுகிறது
பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை கர்நாடக அரசு, காவிரி நதிநீரில் இருந்து தமிழகத்திற்கு மொத்தமாக 86 டிஎம்சி தண்ணீர் அளித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அளித்துள்ளது.
இதனால், கோடை காலத்தில் மேட்டூர் அணையில் நீர் தேக்கி வைப்பதும் பாதிக்கப்படுகிறது. காவிரி நீரை நம்பியுள்ள குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர காவிரி நதிநீர் பகிர்வு ஆணையத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதி நீர் பகிர்வு ஆணையம் கூடி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, காவிரி நதிநீர் பகிர்வு ஆணையத்தை உடனடியாகக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


