
மின்விசையில் செல்லும் செடான் வகை பெரிய கார் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தது.
உலகப் புகழ்பெற்ற டெஸ்லா குழுமத்தைச் சேர்ந்த டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனம் மாடல்-எஸ் என்கிற மின் விசை ரக கார்களை கலிஃபோர்னியா மாகாணம் ஃப்ரீமாண்டில் உள்ள தனது ஆலையில் தயாரிக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் பத்து கார்கள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆண்டு ஐயாயிரம் கார்களை விற்க முடியும் என்று டெஸ்லா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு சில முன்னோடிக் கார்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பெரும் எண்ணிக்கையில் மின்விசைக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. டெஸ்லாவின் அடிப்படை மாடலில் ஒரு முறை மின்சாரம் சார்ஜ் செய்தால் 257 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்தக் காரில் ஐந்து பேர் பயணம் செய்யலாம். இந்த மாடலை வாங்குவதற்கு இதுவரை பத்தாயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதன் விலை 49 ஆயிரத்து 900 டாலர் (சுமார் ரூ.27 லட்சம்).
டெஸ்லா நிறுவனத்தின் சிறப்பு விற்பனைத் திட்டப்படி முதல் மூன்று கார்கள் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டுக்கே எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு கார்கள் ஏறத்தாழ 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிகாகோ நகருக்கு நிறுவனத்தின் ஓட்டுநர்களால் ஓட்டிச் செல்லப்பட்டன. மூன்றாவது கார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலோ ஆல்டோ நகரில் உள்ள வாடிக்கையாளர் வீட்டுக்கு ஓட்டிச் செல்லப்பட்டது.


