
கடலூர் மாவட்டத்தில் சத்துணவு பணியாளர், சமையலர் பதவிக்கான நேர்முகத்தேர்வு நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்தது.
மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 5 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 115 சத்துணவு பொறுப்பாளர்கள், 285 உதவியாளர்கள், 148 சமையலர்கள் என மொத்தம் 548 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
இப் பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள காலிபணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று ஒரே நாளில் நடந்தது.
கடலூர் ஊராட்சி ஒன்றியம்: கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 சத்துணவு பொறுப்பாளர், 5 சமையலர், 35 உதவியாளர் உட்பட மொத்தம் 50 பணியிடங்களுக்கு மொத்தம் 1,279 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அவற்றில் தகுதியான விண்ணப்பங்களாக 460 ஏற்றுக்கொள்ளப்பட்டு நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டன. மீதியுள்ள 819 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நேர்முகத்தேர்வில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 8 பொறுப்பாளர்கள், 14 சத்துணவு சமையலர் மற்றும் 18 சத்துணவு உதவி சமையலர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் 100க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து இருந்ததால் ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. நேர்முகத்தேர்வில் பி.டி.ஓ., ஜவகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், வீரமணி, இப்ராஹீம் ஆகியோர் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றியத்தில் 15 சத்துணவு அமைப்பாளர்கள், 10 சமையலர்கள், 32 துணை அமைப்பாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலில் மொத்தம் 859பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்க்காணலில் காலை முதல் மதியம் வரை 232 பேரும், மதியம் 2 மணியளவில் துவங்கிய சத்துணவு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நேர்க்காணலில் 209 பேரும் பங்கேற்றனர். 349 விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
கம்மாபுரம்: கம்மாபுரம் ஒன்றியத்தில் 10 மையங்களில் பொறுப்பாளர்கள் 10, சமையலர் 2, உதவி சமையலர் 20 இடங்களுக்கு 751 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தகுதியுடைய 336 பேருக்கு நேர்க்காணல் நடந்தது.
கரைவேட்டிகள் வலம்...: நேர்க்காணலில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கரைவேட்டிகளுடன் வலம் வந்தனர். இதனால், சாதாரண விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு சிபாரிசு இல்லாமல் போனால் எங்கே நிராகரித்து விடுவார்களோ என அச்சத்துடனேயே நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
பெண்கள் அலைகழிப்பு: கடலூர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அழைப்புக் கடிதம் கிடைக்காத ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 காலி பணிடங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றுக்கு 3 கி.மீ., தொலைவிற்குள் இருப்பவர்கள் தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் அக்கம்பக்கம் கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேர்முகத் தேர்வுக்கு தகுதியான 3ல் ஒரு பங்கு விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. மீதியுள்ள 2 பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
நிராகரிக்கப்பட்டது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. அதனால் அவர்கள் நேர்முகத்தேர்வை முன்கூட்டியே அறிந்து கொண்டு நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். ஏன் தங்களுக்கு அழைப்பிதழ் கடிதம் அனுப்பவில்லை என அலுவலக ஊழியர்களிடம், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி அவர்களிடம் சமரசம் பேசி நேர்முகத்தேர்வில் பங்கேற்க வைப்பதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி "கண்துடைப்பாக' கடிதம் கிடைக்கப் பெறாதவர்களை மைக்கில் அழைத்து "உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன' என ஒரே வார்த்தையில் பதிலளித்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் திரண்டிருந்த பெண்கள் புலம்பியபடி கலைந்து சென்றனர். இதே நிலை மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.



Comments
Quoting அபூ ஹானியா:
நம்ம மாவட்ட கலெக்டர் நேர்மையாக பணியாற்றக்கூடிய வர் கடந்த முறை அவர் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது மேலிடத்து சிபாரிசுவை கேட்டுநடக்கவில் லை என்பதற்காகதான், இவர் கன்யாகுமரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டதாக செய்திகள் அப்போது வந்தது
RSS feed for comments to this post