
கடலூர் மாவட்டத்தில், 'தானே' புயல் பாதிப்பால், சோகத்தில் மூழ்கி உள்ளவர்கள், மதுக்கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், கடலூர் மாவட்டத்தில், "டாஸ்மாக்' வர்த்தகம் நாள்தோறும், இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு நடக்கிறது.
உற்சாக வாழ்க்கை:
மாவட்டத்தில், முந்திரி, பலா, தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் விவசாயிகளில் பெரும் பகுதியினர் தினப்படி வேலைக்கும் செல்ல மாட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் தோப்புக்கு சென்று முந்திரிகளை, மூட்டைகளில் பொறுக்கி வைப்பார்கள். அதனை ஆண்கள், முந்திரி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இதேபோல, மகசூல் நேரத்தில், தென்னை மற்றும் பலா மரங்களை, மொத்த வியாபாரிகளிடம் ஒப்பந்தம் செய்வார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை, குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து கொள்வார்கள். பெரிதாக எந்த வேலையும் இல்லாமலே பணம் கிடைக்காததால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் உற்சாகமாக, பல பொழுதுபோக்குகளுடன் இருந்து வந்தனர்.
ஆனால், கடந்த டிசம்பர் மாதத்துடன், இவர்களில் பலரது, உற்சாகம், சோகமாக மாறி உள்ளது. அப்போது தாக்கிய, 'தானே' புயலில், முந்திரி, தென்னை, பலா மரங்கள் தூக்கி எறியப்பட்டதால், இவர்களின் வருமானம் கேள்விக்குறியானது. நிரந்தர வருமானம் பறிபோனதால், சோகத்தில் இருக்கும் அவர்கள், வழக்கத்தை விட அதிகமாக மது குடிக்க ஆரம்பித்து உள்ளனர். கூலி வேலை செய்வதுமே, பலருக்கு குடிப்பதற்கான பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே உள்ளது.
நிவாரண பணம்:
'தானே' புயல் பாதிப்பிற்காக, வீடு, தோட்டங்களை இழந்தவர்களுக்கு, அரசு, பல்வேறு நிவாரணங்களை வழங்கியது. நிரந்தர வருவாயை இழந்தவர்கள் பலர், இந்த பணத்தை வேறு எந்த முதலீட்டிற்கும் பயன்படுத்தாமல், குடிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தி உள்ளனர். நிவாரண பணம் செலவாகி விட்டதால், தற்போது, வீட்டில் இருக்கும் பொருட்களையும், நிலங்களையும் அவர்கள் விற்று வருகின்றனர்.முந்திரி, பலா, தென்னை மரங்கள் மட்டுமின்றி கரும்பு, சவுக்கு உள்ளிட்டவற்றை பயிர் செய்து பலருக்கு வேலை வழங்கி முதலாளிகளாக இருந்த பலரும், கூலி வேலைக்கு சென்று, வேலை கிடைக்காததால் அந்த சோகத்திலும் மது குடிக்கின்றனர்.
இது குறித்து, பேய்காநத்தம் கிராமத்தை சேர்ந்த, தனசேகரன், 46, கூறுகையில், "எனக்கு 10 ஏக்கரில் முந்திரி, கரும்பு, சவுக்கு செடிகள் இருந்தது. முந்திரி மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரமும், கரும்பு மூலம் 60 ஆயிரமும், சவுக்கு மூலம் 20 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். இப்போது ஒரு வருமானமும் கிடையாது. நான் முன்பு ஆட்களை வைத்து வேலை வாங்கினேன். இப்போது, வேலை தேடி அலைகிறேன்,'' என்றார்.
மேலும், "முதலாளியாக இருந்த நீ எப்படி வேலை செய்வாய் என, கூறி என்னை யாரும் வேலைக்கு சேர்ப்பதில்லை. அரசு தரப்பில் இருந்து எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காய்ந்த மர விறகுகளை விற்று தினமும் மூன்று வேலை குடிக்கிறேன். இதற்காக 160 ரூபாய் வரை செலவிடுகிறேன்,'' என்றார்.
'டாஸ்மாக்' வருமானம்:
டிசம்பர் மாதத்திற்கு முன்பு, அதிகபட்சமாக நாள்தோறும் ஒரு கோடி ரூபாய் வரை இருந்த 'டாஸ்மாக்' விற்பனை, ஜனவரி மாதம் முதல், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளது. இதற்கு நிவாரண பணமும், அங்கு நிலவும் இழப்பு மனநிலையும் தான் என, கூறப்படுகிறது.தற்போது, மாவட்டத்தில், தினந்தோரும், இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு 'டாஸ்மாக்' வர்த்தகம் நடக்கிறது. விடுமுறை நாட்களில், 2.25 கோடி ரூபாய் அளவிற்கும் உயர்ந்து வருகிறது. இந்த அதிகரிப்பில், மது விலை உயர்த்தப் பட்டதின் பங்கு, வெறும் 10 லட்சம் ரூபாய் தான். ஒரு மாதத்தில், 'பீர்' மட்டும் ஒரு லட்சம் பெட்டிகளும், மற்ற மது வகைகள், 1.40 லட்சம் பெட்டிகள் வரையும் விற்பனையாகின்றன.
இது குறித்து, கடலூர் மாவட்ட, 'டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறும்போது, "தானே புயல் பாதிப்பிற்கு பின் கடலூரில் 'டாஸ்மாக்' விற்பனை அதிகரித்தது. ஆனால், இப்போது 'டாஸ்மாக்' வருவாய் அதைவிட சற்று குறைந்து உள்ளது. இருப்பினும், அப்போதிருந்த விற்பனை இலக்கை மீண்டும் எட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்,'' என்றார்.
அரசு நடவடிக்கை?
சமூகத்தில் இவ்வளவு பெரிய பிரச்னை உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், அரசின் கவனம் 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிப்பதில் தான் உள்ளதாக தெரிகிறது. சில அரசியல் கட்சிகள் கோரி வந்த படி, இந்த மாவட்டங்களில், 'டாஸ்மாக்' கடைகளை ஒரு மாதத்திற்கு மூடியிருந்தால் இந்த பிரச்னையை ஓரளவிற்கு தவிர்த்திருக்கலாம். பிரச்னை பூதாகாரமாக வெடிக்கும் முன், சமூகவியல் வல்லுனர்களோடு இணைந்து அரசு நடவடிக்கை எடுத்தால், மாவட்டம் சீரான நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரிக்கும் அமோகம்:
கடலூர் குடிமகன்களில் வருவாய், தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமின்றி புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள், சாராயக்கடைகளுக்கும் அதிகளவில் சென்று சேர்கிறது.
புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகளுக்கு செல்ல முன்பு கடலூர் குடிமகன்களுக்கு வசதியாக சாராய வியாபாரிகளால் தரைப்பாலம் அமைத்து கொடுத்த வரலாறும் உள்ளது.இப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரி சாராய கடைகளுக்கு ஷேர் ஆட்டோக்களில் இலவசமாக குடிமகன்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு மதுஅருந்திய பிறகு மீண்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, கடலூரில் விட்டு செல்கின்றனர்.
இது குறித்து, கடலூர் மாவட்ட, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதுச்சேரி செல்லும் குடிமகன்கள் எண்ணிக்கையை குறைத்தால், கடலூரில் டாஸ்மாக் மது விற்பனையை மேலும் அதிகரிக்க முடியும். ஆனால், சோதனை சாவடியில் உள்ள போலீசார் ஒத்துழைக்காததால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,'' என்றார்.
'எனக்கு மூன்று ஏக்கரில் முந்திரி மற்றும் பலா மரங்கள் இருந்தன. முந்திரி மூலம் ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாயும், பலா மூலம் 15 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைக்கும். ஆனால், இப்போது எந்த வருமானமும் இல்லை. மரம் வெட்டும் கூலி வேலைக்கு செல்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மது குடித்து வருகிறேன்'' என்கிறார்விவசாயி செல்வமணி.
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் எனக்கு முந்திரித் தோப்பு இருந்தது. அதில் இருந்து ஆண்டுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 'தானே' புயலுக்கு பிறகு வருமானம் முழுவதும் போய் விட்டது. ஏற்கனவே, மனைவி இறந்த சோகமும் என்னை வாட்டுகிறது. கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மது குடித்து வருகிறேன். சம்மந்தமூர்த்தி விவசாயி, காட்டு வேகாகொல்லை கிராமம்.
- தினமலர் நிருபர்


