
சென்னையில் கடலோரக் கண்காணிப்புப் பணிகளுக்காக 9 நவீன வாகனங்கள் வாங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதி உள்ளது. தமிழகத்தில் இருந்து கடல் வழியாக அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், மாநிலத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும், கடலோரப் பாதுகாப்பு குறித்த நுண்ணறிவுத் தகவல்களைப் பெறுவதற்கும் கடலோரப் பாதுகாப்புப் படை என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு தனது பணியைத் திறம்பட மேற்கொள்ளும் வகையில், அனைத்து வகையான பாதைகளிலும் துரிதமாக செல்வதற்காக, கடலோரப் பாதுகாப்புப் படையின் 12 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஜீப் அளிக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார். தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை முதல் பெசன்ட் நகர் பகுதி வரை உள்ள மீக நீளமான மணற்பாங்கான கடற்கரைப் பகுதியில், அதிகாலை முதல் இரவு வரை நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்குக்காக அனைத்து தரப்பு மக்களும் மெரினா, எலியட்ஸ் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு தினந்தோறும் அதிக அளவில் வருகின்றனர்.
எனவே, இந்தப் பகுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தவிர்த்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், கடற்கரை வழியாக மாநிலத்துக்குள் ஊடுருவல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் காவல் துறையினர் தங்கள் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள ஏதுவாக, கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்வதற்கேற்ற ஊர்திகள் காவல் துறையினரின் பயன்பாட்டுக்கு மிகவும் அவசியமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினருக்கு அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய 9 வாகனங்கள் ரூ.34.25 லட்சம் செலவில் வாங்கப்படும். இந்த ஒன்பது வாகனங்களில், மெரினா கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஆறு வாகனங்களையும், எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள 2 வாகனங்களையும், திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஒரு வாகனத்தையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


