Saturday, May 25th

Last update:10:01:21 PM GMT

You are here:

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கூடாது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கூடாது என்று தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழக அரசு சில தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க அரசாணை பிறப்பித்திருப்பதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துக்குமரன், தமிழறிஞர் வா.மு.சேதுராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழறிஞர் கூட்டமைப்பினர் இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
 
தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வழிக் கல்வி கொண்டுவரப்பட்டது. தாய்மொழி வழி கல்வியின் மூலமாகத்தான் குழந்தையின் அறிவு பூரண வளர்ச்சியடையும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் இன்று உலகம் முழுவதும் சிறந்த பதவிகளை வகித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் மூலம் ஏற்பட்டுள்ள இந்த ஆங்கில மோகத்தால், தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
 
ஆங்கில வழி தனியார் பள்ளிகளையும் தமிழ் வழி பள்ளிகளாக மாற்ற வேண்டிய அரசே, தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது வேதனையளிக்கிறது. தாய்மொழிக் கல்வியில் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் 2,200 மணி நேரம் வகுப்புகளில் ஆங்கிலம் படிக்கின்றனர். ஆனாலும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. ஒரு மொழியை 400 முதல் 500 மணி நேரம் வரை படித்தாலே குழந்தைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடியும்.
 
அதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்காக ஆங்கில வழியில் படிப்பது தேவையில்லாத ஒன்று. ஆங்கிலம் படித்தால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம் என்பது மாயை. தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால் வேறு எங்கே இதை பயிற்றுவிக்க முடியும்? தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உள்பட தமிழகத்தில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் தமிழ்தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். அதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
 
தமிழோடு ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் வரை முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியே தொடர வேண்டும். ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை கைவிட வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு அறிஞர் குழுக்களை அமைத்தும், பேரவையில் விவாதித்தும் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை பகிர...

Add comment